Ads Here

06 ஜனவரி, 2020

விருப்பார்வமும், விருப்பார்வ பட்டியல்களும் (Interest Inventories)

விருப்பார்வம் (Interest)

கில்ஃபோர்டின் (Guilford) அவர்களின் வரையறைப்படி, "விருப்பார்வம் என்பது, குறிப்பிட்ட தொழிலோடு தொடர்புடைய செயல்களிலும், அதனைத் தாண்டி அத்தொழிலின் மறைமுகத் தாக்கம் பெற்ற செயல்களிலும் ஒருவர் கொண்டுள்ள ஈர்ப்பு அல்லது ஈடுபாடு ஆகும்."

விருப்பார்வ பட்டியல்கள் (Interest Inventories) அல்லது விருப்பங்களின் வகைகள்

நாம் பிறக்கும்போதே சில குறிப்பிட்ட ஆர்வங்களுடன் பிறப்பதில்லை. சூழ்நிலைத் தாக்கங்களின் துணை கொண்டு, நாம் பல்வகை ஆர்வங்களை வளர்த்துக் கொள்கிறோம். பொதுவாக மூன்று பரப்புகளில் விருப்பார்வத்தை அளவிடும் சோதனைகள் உருவாக்கப்படுகின்றன. அவையாவன: (1) பொது ஆர்வங்கள் (General interests), (2) தொழில் ஆர்வங்கள் (Vocational Interests) மற்றும் (3) கல்வி ஆர்வங்கள் (Educational Interests).

பல்வேறு துறைகள், அவை ஒவ்வொன்றிலும் இடம்பெறும் சில முக்கிய செயல்கள் பட்டியலிடப்படும். இவ்வாறு பட்டியலிடப்பட்ட செயல்களில் ஒருவர் தனக்குள்ள விருப்பம் அல்லது விருப்பமின்மையை தெரிவிப்பதன் மூலம் அவரது விருப்பார்வம் சோதனையாளரால் மதிப்பிடப்படும். இத்தகைய ஆர்வ அளவீடுகள் அவையத் தன்மையுடையவை; இவை விருப்பார்வ பட்டியல்கள் (Interest Inventories) கொண்டு பெறப்படுகின்றன.

கில்ஃபோர்டு அவர்களின் கருத்துப்படி, ஒருவரது ஆர்வமும் தொழிலும் நெருங்கிய தொடர்பு கொண்டு காணப்படுகின்றன. அனைத்து தொழில்களையும் ஆறுவகை ஆர்வங்களுக்குள் அடக்கிட முடியும். அவையாவன:

(1) இயந்திரவியலில் ஆர்வம்

உடலுழைப்பு மற்றும் இயந்திரங்களை இயக்குதலோடு தொடர்புடைய செயல்களில் அதிக ஆர்வமும், சிந்தித்தல் தொடர்பான பணிகளில் குறைந்த அளவு விருப்பமும் கொண்டிருத்தல்.

(2) வணிக ஆர்வம்

விற்பனை, நிர்வாகம், பொதுமக்கள் தொடர்பு, நாவன்மை, சமூக அறிவியல், புலனுணர்ச்சியில் மனநிறைவு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுதல்.

(3) அறிவியல் ஆர்வம்

அறிவியல் ஆய்வு, கணித கருத்துகள், ஆய்வகப்பணி, விவரங்களில் துல்லியம் கோருதல், எச்சரிக்கையோடு செயல்படல் போன்றவற்றை விருப்பத்துடன் ஏற்றல்.

(4) அழகுணர்ச்சியில் ஆர்வம்

அழகினை வெளிப்படுத்துதலிலும், பாராட்டுவதிலும் கவனம் செலுத்துதல், வரைதல், நடித்தல், இசைத்தல், இலக்கிய ரசனையை வெளிப்படுத்தல் போன்ற செயல்களில் இன்பம் காணுதல்.

(5) சமூகப் பணிகளில் ஆர்வம்

பிறரது நலனில் அக்கறை கொள்ளுதல், பிறரைக் கட்டுப்படுத்துதல், அலுவலகச் செயல்கள், பொறுப்புணர்வு (responsibility), பிறரை சமாதானப்படுத்துதல் போன்றவற்றில் விருப்பம் கொண்டு விளங்குதல்.

(6) வெளிப்புறப் பணிகளில் ஆர்வம்

வெளிப்புறப் பணிகளான விவசாயம், கட்டுமானம் (Construction), மாற்றியமைத்தல் (Manipulation), தோட்டக்கலை மற்றும் காடு வளர்ப்பு போன்றவற்றில் விருப்பம் கொண்டிருத்தல்.