Ads Here

06 ஜனவரி, 2020

குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் (2009) (Right of Children to Free and Compulsory Education Act, 2009 - RTE)


இந்திய அரசியல் சாசனத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள 45-வது பிரிவு (குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம்) கூறுவது போன்று, 6 முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE), ஆகஸ்ட் 27, 2009-இல் இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு, ஏப்ரல் 1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் பொறுப்புகள் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

இச்சட்டத்தின் (2009 RTE Act) முக்கிய அம்சங்களாவன:

(1) 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளும், தமது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி பெற உரிமையுடையவர்கள் ஆவர்.

(2) எட்டாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியைப் பெற, குழந்தைகள் அவரவர் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். தேவைப்படின், இதற்கான சிறப்புப் பயிற்சிகள் தரப்படும்.

(3) ஒரு பள்ளியிலிருந்து பிறிதொரு பள்ளியில் சேர குழந்தைகளுக்கு உரிமை உண்டு. இவ்வாறு மாறுதல் பெறுதல், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

(4) இச்சட்டம் நடைமுறைக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள், மாணவர்களின் சுற்றுப்புறங்களில் பள்ளிகள் இல்லாத இடங்களில், பள்ளிகளை ஏற்படுத்தும் பொறுப்பு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை சேர்ந்ததாகும்.

(5) இச்சட்டத்தை செயற்படுத்துவதற்கான நிதியை அளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும்.

(6) இச்சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி குடியரசுத்தலைவர் மத்திய நிதிக்குழுவை (Central Finance Commission) கேட்டுக் கொள்ள, மத்திய அரசு கோரலாம்.

(7) சட்டத்தை செயற்படுத்துவதற்கு மத்திய அரசு அளித்திடும் நிதியைத் தவிர, தேவைப்படும் மிகுதியான நிதிக்கு, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

(8) மாணவர்களை பள்ளியில் சேர்க்க நிதி கேட்பதோ (Dernanding capitation fee), மாணவர்களையோ அவர்களது பெற்றோர்களையோ நுழைவுச் சோதனைக்கு (Screening Test) உட்படுத்துவதோ கூடாது.

(9) வயதுச்சான்று தரஇயலவில்லை என்ற காரணத்திற்காக மாணவரை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது.

(10) பள்ளியில் சேர்க்கப்பட்ட எந்த குழந்தையையும் எட்டாவது வகுப்பு வரையில் எந்தவொரு வகுப்பிலும் தேக்கி வைப்பதோஅல்லது பள்ளியை விட்டு வெளியேற்றுதலோ கூடாது.

(11) நலிந்த பிரிவினர், மற்றும் விளிம்புநிலை குழுவினரிடம் (Weaker section and Marginalised group) பாகுபாடு காண்பிக்கக் கூடாது.

(12) ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல, தரமுள்ள கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

(13) ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தும், குறிப்பிட்ட காலவரம்பிற்குள் கலைத்திட்டம், பாடப்பொருள் போன்றவற்றைத் தயாரித்தும் இச்சட்டத்தை செயற்படுத்திட வேண்டும்.

(14) எந்தவொரு குழந்தைக்கும் உடலை வருத்தும் தண்டனையோ (Physical Punishment), உளவியல் ரீதியான தொல்லையோ (Mental harassment) தரக்கூடாது.

(15) அரசு அங்கீகாரமின்றி எந்தவொரு தனியார் பள்ளியும் நிறுவப்படக்கூடாது.

(16) வரையறுக்கப்பட்ட தரங்களிலில்லாத பள்ளிகளை (Schools not having the specified norms and standards) நிறுவுதலோ, அவற்றிற்கு அங்கீகாரம் தருதலோ கூடாது.

(17) பள்ளி மேலாண்மைக் குழுவில் (School Management Committee) மாணவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர், ஆசிரியர்கள், மற்றும் ஊராட்சி நிர்வாக அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே இடம் பெற வேண்டும். குழு உறுப்பினர்களில் 75% பெற்றோர்களாகவும், 50% பெண்களாகவும் இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களில், நலிந்த பிரிவினருக்கு, உரிய விகிதத்தில் இடமளித்தல் வேண்டும். பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தயாரித்தலும், பள்ளியின் செயற்பாட்டை கண்காணித்தலும் (Monitoring the working of the school), பள்ளி பெற்றிடும் நிதிமுறையாக செலவிடப்படுவதை கண்காணித்தலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பாகும்.

(18) பள்ளிக்கு ஆசிரியர்கள் தவறாமல் வருவதோடு, நேரத்தோடும் (Regular and punctual) வருதல் வேண்டும். குறிப்பிட்ட கால வரம்பிற்குள் பாடதிட்டத்தை (Syllabus) முழுமையாக முடித்தல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறமையையும் மதிப்பிட்டு, தேவைப்படும் கூடுதல் அல்லது சிறப்பு கற்பித்தலை மேற்கொள்ளவேண்டும். மாணவர்களது பெற்றோர்களை அவ்வப்போது சந்தித்து மாணவர்களின் வருகைப் பதிவு (Attendance), கற்கும் திறமை, கற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து தெரிவித்தல் வேண்டும்.

(19) ஆசிரியர் - மாணவர் விகிதம் பின்வருமாறு அமைந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
(அ) முதல் ஐந்து வகுப்புகள் 
  • மாணவர்களின் எண்ணிக்கை 60 அல்லது அதற்கும் கீழ் எனில், 2 ஆசிரியர்கள் தேவைப்படுவர்.
  • மாணவர்களின் எண்ணிக்கை 61 முதல் 90 வரை எனில், 3 ஆசிரியர்கள் தேவைப்படுவர்.
  • மாணவர்களின் எண்ணிக்கை 91 முதல் 120 வரை எனில், 4 ஆசிரியர்கள் தேவைப்படுவர்.
  • மாணவர்களின் எண்ணிக்கை 121 முதல் 200 வரை எனில், 5 ஆசிரியர்கள் தேவைப்படுவர்.
  • மாணவர்களின் எண்ணிக்கை 200க்கு மேல் எனில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:40 என்ற அளவில் இருத்தல் வேண்டும்.  

(ஆ) ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 
  • ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:35 எனக் கொண்டும் அவர்களுக்கு அறிவியல் ஆசிரியர் ஒருவர், சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர், கணித ஆசிரியர் -ஒருவர், மொழிப்பாட ஆசிரியர் ஒருவர் என இருத்தல் வேண்டும். 
  • மேலும் எத்தனை வகுப்புகளின் பிரிவுகள் இருக்கின்றனவோ அத்தனை ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில், முறையான ஆசிரியர்களைத் தவிர, கூடுதலாக முழுநேர தலைமையாசிரியர் ஒருவரும், கலைக்கல்வி, உடற்பயிற்சிக்கல்வி, பணி அனுபவக் கல்வி போன்றவற்றிற்கு பகுதிநேர ஆசிரியர் (Part-time teacher) ஒருவரும் இருத்தல் வேண்டும்.
(20) எல்லாப் பள்ளிகளிலும் அனைத்துப் பருவகால சூழ்நிலையிலும் மாணவர்களுக்கு போதிய இடவசதி, இருக்கை வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, கற்றல் - கற்பித்தன் பொருட்கள் இருத்தல் உறுதி செய்யப்பட வேண்டும்.

(21) ஒவ்வொரு தனியார் பள்ளியின் அனைத்து வகுப்பு நிலைகளிலும் (In all grades of the school), பள்ளிக்கு அருகாமையில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினரது குழந்தைகளுக்கு 25% இடங்கள் ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆகும் செலவு அடிப்படையில் ஆண்டுதோறும் அரசால் அளிக்கப்படும்.