Ads Here

22 ஜனவரி, 2019

பொருளாதார திட்டமிடல் (Economic Planning)


பொருளாதார திட்டமிடல் (Economic Planning)

பொருளாதார திட்டமிடல்

பொருளாதார திட்டத்தை அறிவியல் அடிப்படையில் முதன் முதலில் ரஷ்யாவில் தான் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கொண்டனர். 1928-ல் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் மற்ற நாடுகளின் எண்ணத்தைக் கவர்ந்தன. பொருளாதாரத் திட்டத்தை மேற்கொள்வதன் மூலமாக ஒரு நாட்டில் கிடைக்கின்ற இயற்கை வளங்களை (Natural Resources) சரியான முறையில் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஒரு நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருப்பதில்லை. நாட்டின் தேவையின் அளவிற்கு பற்றாக்குறையாக இருக்கிற நிலையைக் காண்கிறோம். எனவே அத்தகைய பற்றாக்குறை வளங்களை சரியான முறையில் பங்கிட்டு உற்பத்தியை அதிகரித்தால் தான் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வு மேம்படும். இவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு தான் திட்டத்திற்கான நோக்கங்கள் வரையறுக்கப் படுகின்றன. அதனால் உற்பத்தி எந்த அளவு அதிகரிக்கும் என்பன போன்ற இலக்குகளையும் அரசு மேற்கொள்ளும்.

சாதாரணமாக திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படுகிற யுக்தியாகும். மேலும் அரசானது அதன் வருமானத்தில் எத்தகைய திட்டங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும், எதை பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பவைகளைக் கருத்தில் கொண்டு சமுதாயத்தினுடைய உடனடித் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவிற்கு தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும். 

திட்டமிடலின் பொதுவான குறிக்கோள்கள் 

  • மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். 
  • இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்தல்.
  • மக்களுக்கு முழு வேலை வாய்ப்பையும், பொருளாதார சமத்துவத்தையும், சமூக நீதியையும் ஏற்படுத்துதல். 
  • பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றி செல்வப் பங்கீட்டை சீர்படுத்துதல். 
  • நாட்டிலுள்ள எல்லா துறைகளையும், சமமாக வளரச் செய்தல்.

திட்டமிடலின் வகைகள் 

இயக்கத் திட்டம் (Planning by Direction)

இயக்கத் திட்டம் (Planning by Direction) சமதர்ம பொருளாதார சமுதாயத்தோடு (Socialist Society) தொடர்பு கொண்டதாகும். இதற்கு உதாரணமாக சோவியத் ரஷ்யாவைக் குறிப்பிடலாம். அதாவது அதிகாரங்களைக் கொண்ட மத்திய அமைப்பு, திட்டங்களைத் தீட்டுவதிலும், இயக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்காகவும், மைய திட்டமிடும் அமைப்பே திட்டங்களை இயற்றுகிறது. இத்திட்டம் அதிக செலவுகளுடன் தொடர்புடையது. 


ஊக்கத் திட்டம் (Planning by Inducement)

ஊக்கத் திட்டம் (Planning by Inducement) என்பது சந்தையை மாற்றி அமைத்து திறமையாகக் கையாள்வதைக் குறிக்கிறது. இவ்வித திட்ட அமைப்பில் அரசின் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொழில் துவங்க சுதந்திரம் உண்டு. எனவே உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை வேகமாக உயர வழிவகுக்கும். இதை Democratic Planning என்றும் குறிப்பிடுவர். 


நிதித் திட்டமிடல் (Financial Planning)

திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட நிதி வசதி தேவை. அதாவது திட்டத்தை செயல்படுத்த திட்டமுறையில் ஆதாரங்கள் (Resources) பணத்தைக் கொண்டு பங்கிடப்படும். அதாவது. இத்திட்டத்தின் கீழ் செலவினங்கள் பணத்தின் அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இதுவே நிதித் திட்டம் (Financial Planning) எனப்படும்.


நீண்ட காலப் பார்வை கொண்ட திட்டமிடல் (Perspective Planning)

Perspective Planning என்ற இத்திட்டத்தை நீண்ட காலத் திட்டம் (Long-Term Planning) என்று குறிப்பிடலாம். இத்திட்டத்தில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் இலக்குகள் (Targets) தீர்மானிக்கப்படும். அதாவது நீண்ட காலத்திற்கான முன்னேற்றங்களைப் பெற எடுக்கப்படும் நடவடிக்கைகளையே குறிக்கும். திட்ட காலத்தையும் தாண்டிய இலக்குகள் தோற்றத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்குகள் 2022-ம் ஆண்டுக்குள் அடைய திட்டமிடப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.


சுட்டிக்காட்டக்கூடிய திட்டம் (Indicative Planning)

திட்டமிடும் அமைப்பு பரவலாக இலக்குகளை நிர்ணயித்து செயல் திட்டங்களை வகுக்கும். அந்த இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது lndicative Planning ஆகும். 1947-50-ல் Monet Plan நடைமுறைக்காலம் முதல் இந்த வகைத் திட்டம் பிரான்ஸ் நாட்டில் நடைமுறையில் உள்ளது. பொதுவாக வளர்ந்த நாடுகளில் (Developed Countries) இத்தகு திட்டம் பின்பற்றப்படும். இந்தியாவில் 8-வது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து திட்டமிடல் Indicative Planning-ஆக மாற்றமடைந்துள்ளது.


பௌதிகவியலான திட்டமிடல் (Physical Planning)

Physical Planning என்பது திட்டமுறையில் மனிதர்கள், பொருட்கள், இயந்திர சாதனங்கள் போன்ற Physical Resources-ஐ அடிப்படையாக வைத்துப் பங்கிடுதலைக் குறிக்கும். 


கட்டாயத் திட்டமிடல் (Imperative Planning)

Imperative Planning என்பது மைய அமைப்பு அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும், அரசின் பார்வையின் கீழ் மேற்கொள்ளும் வகை திட்டமாகும். அதாவது உற்பத்தி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கும் வளர்ச்சிப் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, என்ன உற்பத்தி செய்வது, எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்று நுணுக்கமாகக் கணக்கிட்டு, இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, எந்த சூழ்நிலையிலும், அந்த இலக்கிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளாமல் செயல்படும் திட்டமாகும்.

பொதுவாக இத்தகைய திட்டமிடலை ஒரு மைய அமைப்பு மேற்கொண்டு செயல்படுத்தும். இத்திட்டத்தின் பணிகள் எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்கப்படாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அரசின் கொள்கை முடிவுப்படி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், மக்கள் எந்த அளவுக்குப் பொருட்களைப் பெறுவது, எந்த விலைக்குப் பெறுவது போன்ற அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்படும்.

பொதுவாக இத்தகைய திட்டங்கள் சமதர்ம பொருளாதார (Socialist economies) அமைப்புக்களில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 


சுழற்சித் திட்டம் (Rolling Plan)

வளரும் நாடுகளுக்கு (Developing countries) இந்த சுழற்சித் திட்டத்தை (Rolling Plan) Prof. Myrdal என்பவர் பரிந்துரைத்தார். இந்த சுழற்சித் திட்டம் என்பது 15 முதல் 20 ஆண்டுகள் வரையான நீண்ட காலத் திட்டத்தை வரையறுத்துக்கொண்டு, அக்கால கட்டத்திற்குள் 4 முதல் 5 ஆண்டு திட்டத்தையும் வரையறுத்துக்கொண்டு, அதற்குள்ளும் பல ஒராண்டுத் திட்டங்களை செயல்படுத்துவதாகும்.

அதாவது நீண்டகால, இடைக்கால, மற்றும் ஓராண்டுத் திட்டங்களை, ஒரே திட்ட கால. வரையரைக்குள் செயல்படுத்துவதாகும். இந்த மூன்று கால வரையரைக்கும் தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதாவது இத்திட்டம் கால ஓட்டத்திற்கேற்ப பொருளாதார நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வழி செய்யும் திட்டமாகவும் செயல்படுகிறது.

ஏப்ரல் 1, 1978-ல் ஜனதா அரசு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் 3 ஆண்டுத் திட்டங்களை செயல்படுத்தியது. எனினும் சுழற்சித் திட்டம் ஏப்ரல் 1, 1980-ல் இந்திரா காந்தி அரசினால் கைவிடப்பட்டது. 


அமைப்புத் திட்டமிடல் (Structural Planning)

அமைப்புத் திட்டம் (Structural Planning) என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அல்லது குறிக்கோள்களை, குறிப்பிட்ட கால வரையரைக்குள் அடைவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். இவ்வாறு குறிக்கோளை அடைவதற்கு, பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் அல்லது அடிப்படை அமைப்பு மாற்றங்களை இத்திட்டம் மேற்கொள்கிறது. அதாவது அடிப்படை சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக திட்ட இலக்கை அடைய இத்திட்டம் உதவுகிறது.


நிரந்தரத் திட்டமிடல் (Permanent Planning)

ஒரு பொருளாதார அமைப்பில் பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அதை நிரந்தரத் திட்டம் என்கிறோம். இத்திட்டத்தின் நோக்கங்கள் நீண்ட காலத்திற்கு இலக்குகள் குறிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். சோவியத் ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, போலந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.


அவசர காலத் திட்டமிடல் (Emergency Planning)

அவசர காலத் திட்டம் என்பது ஒரு பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை ஏற்படும்போது மட்டும் திட்டத்தை மேற்கொண்டு அதற்குப் பின்னால் அவற்றை விட்டுவிடுவதாகும். எனவே இத்திட்டம் ஒரு தற்காலிகத் தன்மை கொண்டது. 

இந்தியாவில் திட்டமிடலின் வரலாறு (HISTORY OF PLANNING IN INDIA)

  • 1934-ல் Sir M. Vishvesvaraya என்பவர் 'Planned Economy for India' என்ற நூலை வெளியிட்டதே இந்தியாவில் திட்டமிடல் குறித்த முதல் முயற்சியாகும். இதற்குப் பின் Dr. P.S. Loknathan என்பவரின் Principles of  Planning என்ற நூலும், N.S. Subba Rao என்பவரின் Some Aspects of Planning என்ற நூலும், K.N. Sen என்பவரின் Economic Reconstruction என்ற நூலும் வெளியாயின. 
  • 1938-ல் Indian National Congress அமைப்பு, ஜவகர்லால் நேரு தலைமையில் ஒரு தேசிய திட்டக்குழுவை (National Planning Committee) ஏற்படுத்தியது. எனினும் இக்குழுவின் பரிந்துரைகளை, இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தால் செயல்முறைப்படுத்த இயலவில்லை . 
  • 1944-ல் பம்பாய் நகரைச் சார்ந்த 8 தொழிலதிபர்களின் கூட்டு முயற்சியால் 'The Bombay Plan' (பம்பாய் திட்டம்) என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. எனினும் இத்திட்டமும் பல காரணங்களால் செயல்முறைப் படுத்தப்படவில்லை.
  • Aug. 1944-ல் The Planning and Development Department' என்ற பெயரில் ஒரு தனித் துறையை திட்டமிடலுக்காக தோற்றுவித்ததுடந், Sir. Audishar Dalal என்பவரை அதன் செயல் உறுப்பினராகவும் (Acting member) நியமித்தது. இவர் ஏற்கனவே பம்பாய் திட்டத்தின் திட்டக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் ஆவார். 
  • மகாத்மா காந்தியின் கருத்துக்களில் கவரப்பட்டு, Shri Sriman Narayan என்பவர் 1944-ல் 'Gandhian Plan' (காந்தீய திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்தார். 
  • Mr. M.N.Rao, (Chairman of post-war Reconstruction Committee of Indian Trade-Union) என்பவர் 'People's Plan' (மக்கள் திட்டம்) என்ற திட்டத்தை April 1945-ல் அறிவித்தார்.
  • 1946-ல் இந்தியாவில் இடைக்கால அரசாங்கம் (Interim Government) தோற்றுவிக்கப்பட்டவுடன், High Level Advisory Planning Board என்ற ஒரு வாரியத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் முன்னேற்றத்திற்காக, அரசு ஏற்படுத்தியது. இந்த வாரியம் நாட்டில் நிலவிய பிரச்சினைகளை ஆராய்ந்து, ஒரு நிரந்தர திட்டக்குழுவை (Planning Commission) அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது.
  • 1947-ல் அனைத்திந்திய காங்கிரஸ் குழு ஜவகர்லால் நேரு தலைமையில் Economic Programme Committee என்ற குழுவை ஏற்படுத்தியது.
  • Jan 1950-ல், Shri Jaiprakash Narayan என்பவர் 'Sarvodaya Plan' (சர்வோதயா திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்தார். எனினும் அரசு இத்திட்டம் முழுவதையும் ஏற்றுக்கொள்ளாமல், அதன் ஒரு சில அம்சங்களை மட்டும் ஏற்றுக்கொண்டது. 
  • இறுதியாக திட்டக்குழு (Planning Commission) 15th March, 1950-ல் இந்திய அரசினால் ஜவகர்லால் நேரு தலைமையில் (To prepare a plan for the 'most effective and balanced utilization of the country's resources') தோற்றுவிக்கப்பட்டது. 
  • July 1950-ல் அரசு திட்டக்குழுவிடம் ஆறு ஆண்டுத் திட்டம் (Six year Plan) ஒன்றை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டது. July 1951-ல் திட்டக்குழு ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவினை அரசிடம் சமர்ப்பித்தது. 
  • இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five Year Plans) நிறைவுற்றதுடன், 7 ஓராண்டுத் திட்டங்களும் (Seven Annual Plans) நிறைவேற்றப்பட்டுள்ளன. 
  • இந்தியப் பிரதமரே திட்டக்குழுவின் Ex-officio Chairman (தலைவர்) ஆவார். 

திட்டக்குழு (PLANNING COMMISSION)

  • இந்திய அரசியலமைப்பில் திட்டக்குழு என்ற அமைப்பு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, திட்டக்குழு என்பது ஆலோசனை அளிக்கும் ஒரு அமைப்பாகவே (Advisory Body) உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் தீர்மானம் மூலமாக தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உதவித் தலைவர் (Deputy Chairman) ஆகியோரின் பதவிக்காலம் குறித்து குறிப்பிட்ட வரையரை ஏதுமில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படவோ, பணியில் நீட்டிக்கப்படவோ செய்யலாம். 
  • இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவே திட்டக்குழுவின் முதல் தலைவர் ஆவார். முதல் திட்டக் குழுவில் 5 முழுநேர உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
  • திட்டக் குழுவின் உறுப்பினர்களுக்கென ஒரு குறிப்பிட்ட தகுதிகள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. மத்திய அரசின் கருத்துக்களின் அடிப்படையிலேயே திட்டக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். 

திட்டக்குழுவின் செயல்பாடுகள் (Functions of Planning Commission)

  • நாட்டின் மூலதன இருப்பு, அசையா சொத்துக்களின் மதிப்பு மற்றும் மனித வளம் ஆகியவற்றை மதிப்பிடுதல்.
  • நாட்டின் மனித வளத்தை (Human Resources) முழுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த திட்டமிடுதல். 
  • திட்டமிடுதலின் பல கட்டங்களையும், நிதி மற்றும் வளர்ச்சி ஒதுக்கீடுகளில் எத்துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவற்றைத் தீர்மானித்தல். 
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அம்சங்களை அரசுக்கு எடுத்து உரைப்பதும், அவ்வப்போது நிலவும் சமூக மற்றும் அரசியல் சூழலில் திட்டங்களை நிறைவேற்ற உதவும் சாதக சூழல்களையும் அரசுக்கு உணர்த்துதல். 
  • திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அவ்வப்போது அவற்றின் நிறைவேற்றம் குறித்து ஆய்ந்தறிந்து, அவற்றின் நிறை குறைகளை அரசுக்குத் தெரிவித்தல். 
  • அவ்வப்போது மைய மற்றும் மாநில அரசுகளுக்கு, அவற்றிற்கு தேவைப்படும் திட்ட ஆலோசனைகளை வழங்குதல். 

திட்டம் உருவாக்கப்படும் விதம் (METHOD OF PLAN FORMULATION)

  • திட்டம் உருவாக்கப்படுவதற்கு முன், பல நிலைகள் உள்ளன. முதலாவதாக திட்டக்குழு நாட்டின் உற்பத்தி, மொத்த நுகர்வு (National Consumption), Availability of resources, National investment போன்ற விவரங்களை சேகரிக்கிறது. இதற்குப் பின் அவற்றைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • இதற்குப் பின்னர் திட்டக்குழு உருவாக்கிய திட்டங்களை உரிய புள்ளி விவரங்களுடன் தேசிய வளர்ச்சிக் குழுவிற்கு (National Development Council) அனுப்புகிறது. NDC அத்திட்டத்தை ஆய்ந்த பின்னர், திருத்தங்களுடனோ, திருத்தங்கள் இன்றியோ மீண்டும் திட்டக்குழுவிற்கு திருப்பி அனுப்புகிறது. 
  • இந்த திட்டத்தின் அடிப்படையில், மைய மற்றும் மாநில அரசுகளின் துறைகள் அவற்றுக்கான திட்டங்களை உருவாக்கி அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
  • இதற்கிடையில் திட்டக்குழு துறை வாரியாக வல்லுநர் குழுவிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெறுகிறது. 
  • அனைத்துத் துறைகளும் அனுப்பும் அறிக்கை, திட்டங்கள் மற்றும் வல்லுநர் குழு அறிக்கை, ஆலோசனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திட்டக்குழு திட்டத்தின் வரைவை (Draft Memorandum of the Plan) தயாரிக்கிறது. இத்திட்ட வரைவில் முக்கிய கொள்கைகளும், விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
  • இத்திட்ட வரைவு (Draft Memorandum) மத்திய காபினெட் அமைச்சரவைக்குழுவிற்கு (Central Cabinet) விவாதத்திற்கு அனுப்பப்படும், விவாதம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னர் இத்திட்ட வரைவை மத்திய காபினெட் அமைச்சரவைக் குழு தேசிய வளர்ச்சிக் குழுவிற்கு (NDC) அனுப்புகிறது. 
  • மீண்டும் NDC தனது பரிந்துரைகள், கருத்துக்கள், திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இன்றியோ, அமைச்சரவைக் குழுவின் கருத்துக்களுடன், திட்ட வரைவை திட்டக் குழுவிற்கு அனுப்புகிறது. இதன் பின்னர் திட்டக் குழு அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பரிசீலித்து திட்டத்தை மறு வரைவு செய்கிறது. 
  • இந்த மறு வரைவுத் திட்டம் அனைத்து மைய மற்றும் மாநில அரசுகளின் துறை அமைச்சகங்களுக்கு, அவற்றின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுப்பப்படுகிறது. 
  • இவற்றின் ஆலோசனைகள் பெற்ற பிறகு, திட்டக்குழு தனது இறுதி வரைவை NDC-க்கு அனுப்புகிறது. NDC அத்திட்டத்திற்கு அனுமதியளித்த பின்னர், திட்டத்தின் வரைவு அரசின் அதிகாரப் பூர்வ வெளியீடாக வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடப்பட்ட பின் அத்திட்டம் குறித்து எழும் கருத்துக்கள், ஆலோசனைகள் குறித்து வல்லுநர் குழுக்களிடம் ஆலோசனைகள் பெறப்படும். இவற்றுக்குப் பின்னர் மீண்டும் மத்திய அமைச்சரவைக்கும் தேசிய வளர்ச்சிக் குழுவிற்கும் (NDC) திட்ட வரைவும், பிற அம்சங்களும் அனுப்பப்படும்,
  • இங்கு திட்டம் வடிவமைக்கப்பட்டு, லோக் சபையில் விவாதத்திற்கு வைக்கப்படும். இறுதியாக பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றபின் அரசு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

திட்டக் குழுவின் முக்கியத்துவம்

  • திட்டக்குழுவின் தலைவராக பிரதமர் செயல்படக் கூடாது என்ற பரிந்துரையை நிர்வாக சீர்திருத்தக் குழு (Administrative Commission) அளித்துள்ளது. 
  • பொதுவாக திட்டக்குழுவில் 4 முதல் 7 முழு நேர உறுப்பினர்கள் வரை நியமிக்கப்படுவர். அவ்வாறே Member-Secretary ஒருவரும் நியமிக்கப்படுவார். பொதுவாக ஒரு மூத்த IAS அதிகாரியே Member-Secretary ஆக நியமிக்கப்படுவார்.