இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றமும் செயல்பாடும் (The origin and function of the Indian National Congress)
இந்திய தேசிய காங்கிரஸ் டிசம்பர் 1885-ல் தோற்றுவிக்கப்பட்டது. இது இந்திய அளவில் முறையாக வெளிப்பட்ட முதல் இந்திய தேசிய இயக்கமாகும். எனினும் 1857-ம் ஆண்டில் சிப்பாய் கலகத்திற்குப் பின்பு இதற்கு பல முன்னோடிகள் இருந்தன. ஆனால் அக்கழகங்கள், வட்டம், மாநிலம் ஆகியவற்றுடன் மட்டுமே தொடர்புடையனவாக இருந்தன. குறிப்பாக இந்திய தேசியத்தின் வளர்ச்சி இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்புடையது எனலாம். இந்திய தேசியம் குறித்து எழுதப்பட்ட நூல்களில் திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் எழுதிய 'சுதந்திரத்திற்காக இந்தியா எவ்வாறு பாடுபட்டது' என்ற நூலும் ஒன்றாகும். இந்நூலில் இந்திய தேசியம் குறித்து விளக்கப்படுவதுடன், அத்தகைய உணர்வு கொண்ட நபர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. பொதுவாக இந்தியாவின் பண்பாடு, நாகரிகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தேசியம் முழுமை அடைகிறது எனலாம்.
இந்திய தேசியத்தின் தோற்றம்
இந்திய தேசியத்தின் வயதை 1885 டிசம்பரில் துவங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் வயதோடு ஒப்பிடுவது வழக்கமாக உள்ளது. மக்களுடைய எண்ணங்களையும், கோரிக்கைகளையும் ஒருங்கே உச்சரிக்க ஓர் அனைத்திந்தியக் கழகம் தேவை என்ற நம்பிக்கை பம்பாயில் கூடிய 72 அங்கத்தினர்களின் மனதில் ஓர் உள்ளுணர்வை ஏற்படுத்தியது.
இந்திய தேசிய காங்கிரஸ் என்று தங்களுடைய முயற்சிக்குப் பிரதிநிதிகள் துவக்கக் கூட்டத்தில் பெயரிட்டபோது, தேசியம் என்ற எண்ணத்திற்கு அடையாள அங்கீகாரம் கிடைத்தது. இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதில் இந்தியா ஒரு தேசம் என்றும், அதற்கென்று ஒரு தேசத் தன்மை உண்டென்றும், தனது இன்னல்களுக்கு ஒரு பொதுவான முடிவைத் தேடவே இந்த இயக்கம் தோன்றியது என்றும் கருதப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் - ஓர் அடித்தளம்
இந்திய தேசிய காங்கிரசின் வரலாற்றுடன் இந்திய தேசியத்தின் போக்கு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் அதன் முக்கியத்துவம் முழுமையாகத் தெரியாமல் இருந்தது. பிறகு, காலந்தவறாமல் நடைபெற்ற கூட்டங்கள், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை போன்றவை மக்கள் ஆதரவை உயர்த்தின. அதே நேரத்தில், இந்தியா முழுவதிலும் பெருகியிருந்த கிளை நிறுவனங்களின் வளர்ச்சி இந்திய தேசிய காங்கிரசை ஒரு முக்கிய தேசிய ஸ்தாபனமாக நிலைப்படுத்தியது. இந்தியாவின் முதல் அனைத்திந்திய சங்கமாக காங்கிரசைக் கருதினாலும் 1850-லிருந்து பாடுபட்டு வந்த சிறு சிறு சங்கங்களின் உழைப்பின் உச்சநிலையே காங்கிரஸ் அமைப்பின் தொடக்கத்திற்குக் காரணம் என்று கூறலாம்.
முக்கியமாக காங்கிரஸ் தொடங்குவதற்குக் காரணமாக இருந்ததே, இந்த சிறு சிறு சங்கங்கள் தான் என்று கூறலாம். இவற்றில் 'இந்திய சங்கம்' (Indian Association) முக்கிய சங்கமாகும். லிட்டன் பிரபு ஆட்சிக்காலத்தில், இந்தியர்களின் நலனுக்காக, அரசின் கொள்கைகளை எதிர்த்து, தேசிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொண்ட பெருமை இந்தியச் சங்கத்தையே சாரும்.
பிரிட்டிஷ் இந்தியக் கழகம் (British Indian Association) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதியின் அவசியத்தை வலியுறுத்தியது. இது பிரிட்டிஷ் இந்தியா மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கழகமாக இருந்தாலும், மாகாண அளவில் காணப்பட்ட ஒற்றுமையின்மை, சச்சரவுகள் போன்றவற்றால் தோல்வியடைந்தது. பம்பாயும், பூனாவும் தனித்தனியே கழகங்களை நிறுவிக்கொண்டன. சென்னை மாகாணம் தனியே அவ்வாறு நிறுவிக்கொள்ளும் வரை வங்காளத்துடன் கூட்டாக செயல்பட்டு வந்தது.
- 1881-ல் சென்னை சுதேசிக் கழகம் தோன்றியது.
- 1884-ல் சென்னை மகாஜன சபா (Madras Mahajana Sabha) தோற்றுவிக்கப்பட்டது.
- 1885-ல் பம்பாய் மாகாண சங்கம் (Bombay Presidency Association) தோன்றியது.
இவ்வாறு இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்திற்கு முன்னரே இந்தியாவின் நான்கு முனையைச் சேர்ந்த அறிவாளர்கள் சமூகம் தங்களுக்குத் தாமே அரசியல் சங்கங்களை அமைத்து, வேகமான வெற்றியையும் கண்டன.
அறிவாளர் சமூகத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க இப்புதிய சங்கங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்படவிருந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அரசியலில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.
A.O. ஹியூமின் பங்கு
காங்கிரசின் தந்தை (Father of Congress) என்று ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) அழைக்கப்படுகிறார். காங்கிரசின் முதல் தலைவரான W.C. Bannerjee இவ்வாறு ஹியூமை காங்கிரசின் தந்தை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு அரசு பதவிகளை வகித்தவர் ஹியூம். இந்திய அரசுப் பணிகளில் பணியாற்றிய ஹியூம் அரசு சார்பற்ற ஆதாரங்கள் மற்றும் தமது கணிப்பின் அடிப்படையில் இந்தியாவில் 1857-ல் ஏற்பட்ட மாபெரும் கிளர்ச்சியை விட மோசமானதோர் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என்று அறிந்து, அத்தகைய பேரபாயத்தைத் தடுக்கவே காங்கிரஸ் என்ற அமைப்பை ஓர் வடிகாலாகத் தோற்றுவித்தார் என்று கருதப்படுகிறது.
இந்த காங்கிரஸ் அமைப்பு ஓர் எதிர்க்கட்சியாக செயல்படுவதன் மூலம் ஓர் நல்லிணக்கம் ஏற்படுமென்றும், மக்களின் கொந்தளிக்கும் உணர்வுகளுக்கு ஓர் வடிகாலாக இச்சங்கம் அமையும் என்றும் நம்பினார். இவர் இந்திய அரசாங்கத்தின் வருவாய், விவசாயம் மற்றும் வர்த்தகத் துறை செயலராக (1870-79) பணியாற்றியபோது இந்தியரது நிலை பற்றியும், அவர்களது எண்ணங்கள் குறித்தும் சுமார் 30,000 இரகசிய அறிக்கைகள் அடங்கிய 7 தொகுப்புக் கோப்புக்களைப் பார்க்க நேரிட்டது. மேலும் 1881-ல் மேடம் பிளவாட்ஸ்கி மூலம் இந்தியரது மனநிலை பற்றிய தனது கணிப்பு சரியானதே என்பதும் உறுதியாயிற்று.
இவற்றிலிருந்து ஹியூம் இந்திய மக்களிடையே கொதித்துக் குமுறும் கோபம் இருப்பதையும், அடித்தட்டு மக்கள் வன்முறைக் கிளர்ச்சி மூலம் பிரிட்டீஷ் ஆட்சியை அகற்றுவதற்குத் தயாராக உள்ளனர் என்றும் முடிவுக்கு வந்தார். அத்தகைய சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
1882-ல் அரசுப் பணியிலிருந்து விலகிய ஹியூம் இந்தியர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டுமென்றும், இந்தியர்கள் சமுதாயப் பிரச்னைகளால் பிளவுபடக் கூடாதென்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்தியர்களின் கோரிக்கைகளை பிரிட்டீஷ் அரசு புறக்கணித்தல் கூடாது என்றும் எடுத்துக் கூறினார்.
மார்ச் 1, 1883-ல் கல்கத்தா பல்கலைக் கழகப் பட்டதாரி மாணவர்களுக்கு எழுதிய தனது கடிதத்தில் தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட 50 இந்தியர்கள் கொண்ட அமைப்பை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய தேசிய தலைவர்களோடு தொடர்பு கொண்டார். மேலும் இங்கிலாந்து சென்று ரிப்பன் பிரபு, ஜான் பிரைட் போன்றவர்களின் ஆதரவையும் கோரினார். இந்தியாவில் நடைபெற இருந்த மாநாடு குறித்த தகவல்களை பிரிட்டீஷ் பத்திரிகைகளில் பிரசுரிக்க ஏற்பாடு செய்தார். இந்தியா திரும்பிய ஹியூம் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹியூமின் வாழ்க்கை வரலாற்றை இயற்றிய வில்லியம் வெடர்பன் (William Wedderbun) என்பவர் எதிர்வரும் பேரபாயத்தைத் தடுக்கவே ஹியூம் இந்திய தேசிய காங்கிரசைத் தோற்றுவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ஹியூம் 1885 முதல் 1907 வரை காங்கிரசின் முதல் பொதுச் செயலாளராகப் (General Secretary) பணியாற்றினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஹியூம், இந்தியக் கூட்டணியின் துணையும், உதவியும் மிகவும் அவசியம் என்று நன்கு அறிந்திருந்தார். பம்பாய், பூனா, சென்னை, அலகாபாத் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் கழகங்கள் அமைக்கக் காரணமாக இருந்த செல்வாக்குள்ள கட்சிகளெல்லாம் ஹியூமுடன் நெருக்கமாக உழைத்து ஒரு தேசிய அமைப்பு தோன்றுவதற்கு ஒத்துழைத்தன.
பானர்ஜியின் தலைமையிலான இந்தியக் கழகம், இந்திய தேசிய காங்கிரசுக்கு பிரதிநிதிகள் அனுப்பியது மட்டுமல்லாமல், இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டை கல்கத்தாவில் கூட்டவும் வழி செய்தது. ஒரே குறிக்கோளுக்காக, இரண்டு தேசிய சங்கம் பாடுபடுவது நெடுநாள் தொடர இயலவில்லை. ஆகையால் இரண்டாவது கூட்டம் 1886 டிசம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற போது, இந்தியக் கழகத் தலைவர்கள், அக்கழகத்தைக் கலைத்துவிடுமாறும், காங்கிரசுடன் சேர்ந்துவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
காங்கிரஸ் இயக்கத்தின் தன்மை
ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்த மற்ற மாநிலக் கழகங்களைப் போலவே காங்கிரசும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தன்னுடைய ஆண்டுக் கூட்டத்தினை நடத்தி வந்தது. அடுத்து வரும் ஆண்டில் செயலாக்கும் அரசியல் அலுவல்களைப் பற்றித் திட்டமிடவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும், அடுத்த மாநாட்டை எங்கு நடத்துவது என்று முடிவெடுக்கவும் இக்கூட்டங்கள் உதவின.
காங்கிரசின் கூட்டங்களில்
- 1885-ல் 79 நபர்களும்,
- 1886-ல் 434 உறுப்பினர்கள்,
- 1887-ல் 607 உறுப்பினர்களும்,
- 1888-ல் 1248 உறுப்பினர்களும்,
- 1889-ல் 1889 உறுப்பினர்களும்
கலந்து கொண்டதன் மூலம் காங்கிரசின் திடமான வளர்ச்சியை உணரலாம். தங்களது இயக்கத்தைப் பற்றி நாடு முழுவதும் அறியச் செய்யும் ஆக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள எண்ணினர்.
இந்திய தேசிய காங்கிரஸ் வரலாற்றினை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
- முதல் பகுதி - மிதவாதிகளின் காலம் - 1885 முதல் 1905 வரையிலும்,
- இரண்டாவது பகுதி - தீவிரவாதிகளின் காலம் - 1905 முதல் 1919 வரையிலும்,
- மூன்றாவது பகுதி - காந்தியக் காலம் - 1919 முதல் 1947 வரையிலும்
என பகுக்கப்படுகிறது.
கொள்கை முடிவெடுத்த முறை
அரசியல் அலுவலக காரியங்களை முடிவெடுக்க, இந்திய தேசிய காங்கிரஸ் தனக்கென்று ஒரு மத்திய ஸ்தாபனத்தைப் பல ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 1890 வரை வருடாந்திர மாநாட்டில் இச்சச்சரவு எழுப்பப்படவும் இல்லை. பலதரப்பட்ட எண்ணங்களும், அக்கறைகளும் பெற்றிருந்த மாநில அறிஞர்களைச் சமாதானப் படுத்துவது என்பது சிக்கலாக இருந்ததால், இவ்வாறான மத்திய ஸ்தானத்தை எழுப்ப முடியாமல் இருந்தது எனலாம்.
அன்றைய இந்திய அரசியல் நிலையிலிருந்து பார்ப்பின், மாநில அறிஞர்கள் தங்களை ஒரு சுயாட்சி உரிமை கொண்டவர்களாகவும், தங்கள் உரிமைகளில் பொது வெளிவட்டார தலையீடுகளை அவர்கள் விரும்பாதவர்களாகவும் இருந்தார்கள் என்று அறிகிறோம். காங்கிரஸ் அமைப்பின் உள்ளே ஒற்றுமையும், அமைதியும் இருப்பதற்கு ஏற்றவாறு விதிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொருவருடைய அக்கறைகளுக்கும் குறிப்பாக மாநிலம் மற்றும் வகுப்புப் பிளவுகள் போன்றவற்றிற்கு முக்கியக் கவனம். செலுத்தப்பட்டது. பிளவுகளைத் தவிர்ப்பதற்காக, 'அகில இந்திய ஸ்தாபனமான இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய பிரச்னைகள் மீது மட்டும் தான் அக்கறை காட்டும்' என்று முடிவெடுக்கப்பட்டது. இதனால் மாநிலம் மற்றும் உள்ளூர் பிரச்னைகள் விலக்கப்பட்டன.
காங்கிரசின் ஆரம்ப கால நோக்கங்கள்
காங்கிரஸ் தோன்றிய பொழுது அதன் முக்கிய நோக்கங்கள் மூன்று வகையைச் சார்ந்திருந்தது. முதலில் இந்தியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நல்லுறவினை ஏற்படுத்துதல், இரண்டாவது இந்தியாவில் நிலவிய பல்வேறு பிரிவினர்களை இணைத்து ஒரே இனமாக இணைத்தல், இறுதியாக இந்திய ஆட்சிப் பணியில் அதிக அளவில் இந்தியர்களை ஈடுபடுத்தும் கோரிக்கை. 1885 முதல் 1905 வரையிலான முதல் கால கட்டத்தில் காங்கிரசின் முக்கிய நோக்கங்களாகவும், கோரிக்கைகளாகவும் இருந்த அம்சங்கள் பின்வருமாறு :-
- வைசிராய், கவர்னர் ஆகியோரது ஆட்சிக்குழுக்களை விரிவுபடுத்தி அவற்றில் இந்தியர்களுக்கு அதிக இடங்களை அளித்தல்.
- இராணுவச் செலவு மற்றும் படைக்கலச் செலவைக் குறைத்தல்.
- இந்திய விவகாரச் செயலர் பதவியை நீக்குதல்.
- இந்திய நிர்வாகத்தைப் பற்றி மதிப்பீடு செய்ய ஒரு Royal Commission-ஐ நியமித்தல்.
- பொதுப்பணித் தேர்வுகளை (Civil Services Exam) இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்துதல்.
- பொதுப்பணிகளில் (Public Services) இந்தியர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்குதல்.
- சுயாட்சி நிறுவனங்களுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொடுத்தல்.
- இந்தியத் தொழில்கள், தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்தல். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல்.
- நிலவரியைக் குறைத்தல், நட்புறவுடன் காவல் துறையை சீர்திருத்தி அமைத்தல்.
- ஆட்சித் துறையிலிருந்து நீதித்துறையைப் பிரித்தல்.
- துணைக் கேள்விகளை எழுப்பவும், வரவு செலவுத் திட்டத்தை விவாதிக்கவும் உரிமை பெற்ற பிரதிநிதித்துவ சட்டமன்றத்தை (Representative Legislature) ஏற்படுத்துதல்,
- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகளுக்கு இடமளித்தல்.
- நிலச்சுவான்தாரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
- உப்பு வரியைக் குறைத்தல்.
- கிராம வங்கிகளை ஏற்படுத்துதல்.
காங்கிரஸ் தோற்றமும், பிரிட்டீஷ் இயல்பும்
இந்திய தேசிய காங்கிரஸ் வைசிராய் டஃப்ரின் பிரபுவின் ஆதரவோடு தான் துவங்கப்பட்டது. இரண்டாவது காங்கிரஸ் கூட்டத்தில் (1886) கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு வைசிராய் டஃப்ரின், அரசு இல்லத்தில் விருந்தளித்து சிறப்பித்தார். அதே போன்று சென்னை கவர்னர் கன்னிமாரா பிரபுவும் மூன்றாவதாக சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு (1887) வரவேற்பளித்தார்.
ஆனால் தேசியவாதிகளின் வளர்ச்சி துவங்கியது முதல், பிரிட்டீஷ் அரசு தனது வெறுப்பை காங்கிரஸ் மீது காட்டத் துவங்கியது. இவ்வியக்கத்தின் நடைமுறைகளை திசை மாற்றுவதற்காக, ஆங்கிலேய அரசு ஹியூமிடம் சமுதாயப் பிரச்னைகளைப் பற்றிய விஷயங்களில் காங்கிரசின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தது. இது பற்றிய விவாதங்களிலும் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபடும் என்ற நம்பிக்கையில் காங்கிரசிடம் துவக்கத்தில் ஆங்கிலேய அரசு நட்புறவுடன் இருந்தது. சட்டசபையிலும், நீதித்துறை மற்றும் பல துறைகளிலும் தேசியத் தலைவர்களுக்குப் பதவிகள் அளிப்பதற்குக் கூட ஆங்கிலேயர்கள் விருப்பத்துடன் இருந்தனர்.
ஆனால் காங்கிரஸ் ஒரு வரைமுறையுடன் செயல்படாமல், தேசிய போராட்டக் கருத்துக்களைப் பொதுக் கூட்டங்களின் மூலமாகவும், செய்தித்தாள் மூலமாகவும் பரப்பத் தொடங்கிய பொழுது, பிரிட்டீஷ் அதிகாரிகள் காங்கிரஸ் செயல்களைக் குறைகூறத் தொடங்கினர். பிரிட்டீஷாரின் செயல்கள் மூன்று முறைகளில் காணப்பட்டது.
- பிரித்தாளும் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி, ஆங்கிலேய ஆதரவாளர்களை காங்கிரசிற்கு எதிரான இயக்கங்களைத் தோற்றுவிக்கும்படி ஊக்குவித்தனர். வகுப்பு வாதப் போராட்டங்களின் மூலம் இந்து, முஸ்லீம் பிரிவினையை ஊக்குவித்தனர். பிரித்தாளும் கொள்கையினை சமுதாயத்தில் அனைத்துப் பிரிவிலும் கையாண்டனர். இப்படியாக இக்கொள்கை மாநிலங்களுக்கு எதிராக மாநிலங்களையும், சாதிகளுக்கு எதிராக சாதியினையும், வகுப்புகளுக்கு எதிராக வகுப்புகளையும் செயல்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரசினுள் இருந்த பல்வேறு பிரிவுகளிடையேயும் வேற்றுமை ஏற்படுத்த இந்தப் பிரித்தாளும் கொள்கை (Divide & Rule Policy) பயன்படுத்தப்பட்டது
- சலுகைகள் ஒருபுறம், மறுபுறம் அடக்கு முறைகள் என்ற கொள்கையினை ஆங்கிலேயர் பின்பற்றினர். அவர்கள் தேசியவாதிகளிடையே மிதவாதிகளை, இந்திய சிவில் பணித்துறையில் இந்தியர்களின் நியமனத்திற்கான அதிக வயது வரம்பில் சலுகைகள் கொடுத்தல் மூலம், அதிக எண்ணிக்கையுள்ள இந்தியர்களை மற்ற அரசுப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள வகை செய்து திருப்தி செய்தனர்.
- கல்வித் துறையில் அதிக அளவில் அரசு கட்டுப்பாட்டினைப் புகுத்தியது, அரசின் மூன்றாவது செயல்முறையாகும். இந்திய தேசிய இயக்கம் வளர்ச்சி பெற்றதற்கு முக்கியக் காரணம் கல்வி வளர்ச்சியே என்று பிரிட்டீஷ் அதிகாரிகள் நம்பினர். ஆகவே கல்வி வளர்ச்சியிலும், அதன் அமைப்புக்களிலும், வெளியிடப்பட்ட பாட புத்தகங்களிலும் அரசு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள விழைந்தது. 1903-ம் ஆண்டின் கல்விச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் மீது அதிக கட்டுப்பாட்டினை, பள்ளி, கல்லூரிகளில் ஒருவகையான மேற்பார்வையின் மூலம் விதித்தது. சமய நிறுவனங்கள் நடத்துகின்ற தனியார் கல்லூரிகளின் முன்னேற்றத்திற்கு உதவ அரசு தீர்மானித்தது. நவீன சமய சார்பற்ற கல்விக் கொள்கைக்குப் பதிலாக, சமய அடிப்படையில் பயிற்சிக் கல்வி மேற்கொள்ளப்பட்டது. இக்கல்விக் கொள்கையில் ஏற்பட்ட இப்புதிய மாற்றம் பல விளைவுகளை ஏற்படுத்தியது. ஏனெனில் அது சமய நம்பிக்கையினையும், பிற்போக்கு வாதத்தினையும் ஊக்குவித்ததோடு, எல்லா வகையான வகுப்பு வாதப் பிரிவினைகளையும் ஊக்குவித்தது. மாணவர்களிடையே அறிவியல் நோக்கினை வளர்க்காமல் பிற்போக்குக் கருத்துக்களை வளர்த்தது. இச்செயல் வளர்ந்து வரும் தாராளக் கொள்கையுடைய சமுதாயத்திற்கு பெருத்த அபாயம் என்று கருதி தாராள கருத்துக்கள் பரவுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் மாநாட்டு கூட்டங்கள்
1885 முதல் 1905 வரை இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் ஆண்டுக் கூட்டங்கள்
- பம்பாய் (1885, 1889, 1904),
- கல்கத்தா (1886, 1890, 1896, 1901),
- சென்னை (1887, 1894, 1898, 1903),
- அலகாபாத் (1888, 1892),
- நாக்பூர், லாகூர், பூனா, லக்னோ, அகமதாபாத், பனாரஸ் (1905)
ஆகிய இடங்களில் நடைபெற்றன. பொதுவாக இக்கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாக் காலத்தின்போது சுமார் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். பொதுவான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். Three Day Wonder, Yearly Tamash, Yearly Festival, Festival of Educated Middle Class, Lawyers Paradise என்று பலவாறு இக்கூட்டங்கள் விமர்சிக்கப்பட்டன. கற்றவர்கள் ஆண்டு தோறும் கூடிப்பேசிக் களித்து, ஓய்வெடுத்து, உறங்கிச் செல்லும் விழா என்று காங்கிரஸ் கூட்டத்தை லாலா லஜபதி ராய் வர்ணித்தார்.
காங்கிரஸ் அமைப்பிற்கு இந்திய தேசிய யூனியன் (Indian National Union) என்ற பெயரை வைக்கலாம் என்று ஹியூம் யோசனை தெரிவித்தாலும், தாதாபாய் நௌரோஜியின் அறிவுரையின்படி இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) என்றே பெயர் சூட்டப்பட்டது.
- காங்கிரசின் முதல் கூட்டம் 1885 டிசம்பர் 28-ல் பம்பாய் நகரில் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியின் (Gokuldas Tejpal Sanskrit College) மண்டபத்தில், கல்கத்தாவின் பிரபல வழக்கறிஞரான உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chandra Bannergee) தலைமையில் நடைபெற்றது.
- இரண்டாவது கூட்டம் 1886-ல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்றது.
- மூன்றாவது கூட்டம் 1887-ல் சென்னையில் பக்ருதீன் தயாப்ஜி தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸின் செயல்பாடுகள்
காங்கிரஸ் இயக்கத்தைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த அறிஞர்களின் எண்ணங்களே, இயக்கத்தின் திட்டங்களாகப் பிரதிபலித்தன. சட்டசபை சீர்திருத்தங்கள், படைச் செலவுகளைக் குறைத்தல், நிலவரியில் கட்டணத்தைச் சமமாக்குதல், படைக்கலச் சட்டத்தை ரத்து செய்தல், சட்டம் மற்றும் நீதித் துறையின் கீழிருந்த வருமானத் துறையைப் பிரித்தல், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்துதல், தொழில்நுட்பக் கல்வியை அபிவிருத்தி செய்தல் போன்றவை இந்த இயக்கத்தினால் நடைபெற்ற திட்டங்களாகும். இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் இருந்த மாநிலங்களை இப்பிரச்னைகள் பாதித்த காரணத்தால், இப்பிரச்னைகள் அனைத்திந்தியப் பிரச்னைகளாகக் கருதப்பட்டன. எனவே இவை கூட்டுக்கோரிக்கைகளாக எழுப்பப்பட்டன.
இந்தியாவிற்கு உடனடி சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தன் ஆரம்ப முயற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஜனநாயக அரசியலமைப்பில் படிப்படியாக சுயராஜ்யத்தை ஏற்படுத்துவதையே தனது நோக்கமாக காங்கிரஸ் கொண்டிருந்தது. இது இந்திய தேசிய காங்கிரசின் தலைமை வட்டாரங்களின் அரசியல் நம்பிக்கையையே பிரதிபலித்தது.
இந்திய தேசிய காங்கிரசின் தோன்றலுக்குக் காரணமாயிருந்த மாநிலக் கழகங்களிலிருந்தே அதனுடைய ஆரம்ப காலத்துத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பம்பாய் மாநிலக் கழகத்தைச் சேர்ந்த பிரோஷ் ஷா மேத்தா, தாதாபாய் நௌரோஜி, கே.டி.தில்லாங், பக்ருதீன் தயாப்ஜி, டீன் ஷா இ.வாட்சா, பூனாவிலிருந்த சர்வஜனிக் சபாவைச் சேர்ந்த எம்.ஜி.ரானடே, கோபால கிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், சென்னை மகாஜன சபையைச் சார்ந்த பி.அனந்தசார்லு, சுப்பிரமணிய ஐயர், எம்.விஜயராகவர், பி.ரங்கையா மற்றும் சி.சங்கரன் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசுக்குப் புகழைத் தேடித் தந்தனர்.
1886-ல் இந்திய கழகம் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த போது சுரேந்திர நாத் பானர்ஜி, A.M.போஸ், மன்மோகன் கோஷ் போன்றவர்கள் காங்கிரசின் முன்னணித் தலைமைப் பதவிகளை அலங்கரித்தனர். W.C. பானர்ஜி போன்ற சிலர் மாநிலக் கழகங்களைச் சேர்ந்தவர்களாக இல்லாத போதிலும் ஹியூமுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பால் இந்திய தேசிய காங்கிரசில் முக்கியப் பதவி வகித்து வந்தனர். முன்னணியிலிருந்த தலைவர்கள் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாக இருந்தனர். வழக்கறிஞர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் பதிப்பாசிரியர்களும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுமாவர்.
மிதவாதிகள் (1885-1905)
காங்கிரசின் ஆரம்பப் பகுதி 1885-1905 வரை தேசிய இயக்கத்தில் மிதவாதிகளின் காலம் (Period of Moderates) என்று அழைக்கப்படுகிறது. இக்கால கட்டத்தில், தாராள கொள்கையுடைய அரசியல்வாதிகளாகிய சுரேந்திரநாத் பானர்ஜி, பிரோஸ் ஷா மேத்தா, தாதாபாய் நௌரோஜி, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற தலைவர்கள் காங்கிரசில் செல்வாக்கு பெற்றிருந்தனர். தொடக்க கால தேசிய வாதிகள், இந்தியா முடிவில் சுயாட்சி அடையும் என்று நம்பினர். இதனை அவர்கள் படிப்படியாக அடைய எண்ணினர். தங்கள் இலக்கை அடைவதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள், அவர்களுக்கு ‘மிதவாதிகள்' என்ற பெயரை வழங்கின. அரசியல் பிரச்னைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் அவர்களிடையே பொதுவான ஒருங்கிணைந்த கருத்தினையும் ஏற்படுத்துவதுமே தங்களது முக்கிய நோக்கம் என நம்பினர்.