மக்கள் தொகை (Population)
மக்கள் தொகைப் பரவல்
சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நாடாக விளங்குகிறது. பரப்பளவில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஏழாவது இடத்தைப் பெறுகிறது. 2011-ம் ஆண்டின் 15வது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 121 கோடி மக்கள் தொகையை (தற்போது 2019 Jan 23-ல் 136.23 கோடி, இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 17.74% சதவீதம்) கொண்டுள்ளது. ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத பரப்பை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை பரவல் சமமாகப் காணப்படவில்லை. குறிப்பாக சமவெளிப் பகுதிகள் அதிக மக்கள் தொகையுடனும், மலைகள், காடுகள், வனப்பகுதிகளில் மக்கள் தொகைப் பரவல் குறைவாகவும் காணப்படுகிறது. மக்கள் தொகைப் பரவலில் இந்திய மாநிலங்களின் வரிசையை எடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் பெரிதும் வேறுபாடுகள் காணப்படுவதை உணரலாம்.
உதாரணமாக சிக்கிம் மாநிலம் 0.61 கோடி மக்கள் தொகையுடனும், உத்திரப் பிரதேசம் சுமார் 19.98 கோடி மக்கள் தொகையுடனும் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்தியாவில் 10 மாநிலங்கள் மட்டும் குறைந்தபட்சம் சுமார் 6 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளன (தெளிவாகக் கூறப்போனால் 10 மாநிலங்களில் மட்டுமே சுமார் 92.6 கோடி பேர்). இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் பாதி மக்கள் தொகை உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலேயே பரவி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் குறிப்பாக நிலப்பரப்பில் பெரிய மாநிலங்களே, அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளன என்றும் கூறிவிட இயலாது. உதாரணமாக ராஜஸ்தான் மாநிலம், அதாவது நிலப்பரப்பில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் (10.41 சதவீதம்), இந்திய மக்கள் தொகையில் 5.66 சதவீத மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ளது. அவ்வாறே மத்தியப்பிரதேசம், அதாவது இந்திய நிலப்பரப்பில் 9.37 சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இந்திய மாநிலம், 5.99 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 16.5 சதவீத மக்கள் தொகையை உடைய உத்திரப்பிரதேசம், இந்திய நிலப்பரப்பில் 7.26 சதவீத நிலப்பரப்பையே கொண்டுள்ளது. 8.59 சதவீத மக்கள் தொகையை உடைய பீகார், நிலப்பரப்பில் 2.86 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் நிலப்பரப்பு 2.55 சதவீதம், ஆனால் மக்கள் தொகையோ 0.11 சதவீதம் மட்டுமே.
மக்கள் தொகை அடர்த்தி
மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பில் வாழும் மக்களின் சராசரி எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 460 (2011-ல் 382 பேர்/சகிமீ) ஆகும். சீனாவில் இது 151 மட்டுமே,
உலக அளவில் மக்கள் தொகை அடர்த்தியில், (மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட முதல் 10 நாடுகளில்) பங்களாதேஷ் முதலிடத்திலும் (1291 நபர்கள்), இந்தியா இரண்டாமிடத்திலும், ஜப்பான் மூன்றாமிடத்திலும் (348 நபர்கள்) உள்ளன. மக்கள் தொகை அடர்த்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி 1921-ல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 89 ஆக இருந்தது. 1951-ல் இது 117 ஆகவும், 1971-ல் 177 ஆகவும், 1991-ல் 267 ஆகவும், 2001-ல் 324 ஆகவும் அதிகரித்துள்ளது. 2011-ல் இது 382 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தியை மாநிலங்களின் வரிசைப்படி பார்ப்பின், அருணாச்சலப் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி வெறும் 17 ஆகவும், பீகாரில் இது 1106 ஆகவும், பெறும் வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலம் பீகார் ஆகும். இதற்கு அடுத்த இரண்டாவது அடர்த்தி மிகு மாநிலமாக மேற்கு வங்காளம் (1028 நபர்கள்), மூன்றாவதாக கேரளா (860 நபர்கள்) என செல்கிறது.
பொதுவாக மக்கள் அடர்த்தி சட்லெஜ் - கங்கைச் சமவெளிப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறது. தென் இந்தியாவில் தமிழ்நாடு (555 நபர்கள்), மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே மக்கள் அடர்த்தி சற்றே மிகுந்து காணப்படுகிறது.
மேலும் மகாராஷ்டிரா (365), கோவா (394), ஆந்திரப்பிரதேசம் (308), கர்நாடகா (319), குஜராத் (308), ஒரிசா (270), மத்தியப் பிரதேசம் (236), ராஜஸ்தான் (200), உத்தராஞ்சல் (189), சட்டீஸ்கர் (189), ஹிமாச்சலப்பிரதேசம் (123), மணிப்பூர் (128), மேகாலயா (132), நாகாலாந்து (119),ஜம்மு-காஷ்மீர் (56 நபர்கள்), சிக்கிம் (86 நபர்கள்), மிசோராம் (52 நபர்கள்), அருணாச்சலப் பிரதேசம் (17 நபர்கள்).
மக்கள் தொகை வளர்ச்சியின் போக்கு
1921-ம் ஆண்டு வரை மக்கள் தொகை வளர்ச்சி அதிக அளவில் இல்லை. 1921-லிருந்து. மக்கள் தொகை சீராக உயரத் தொடங்கியது. இந்தியாவில் 1921-ல் 25.1 கோடியாக இருந்த மக்கள் தொகை, 1951-ல் 36.1 கோடியாகவும், 1971-ல் 54.8 கோடியாகவும், 1991-ல் 84.3 கோடியாகவும், 2001-ல் 102.7 கோடியாகவும் பெருகியுள்ளது. 1901-ல் 0.5 சதவீதமாக இருந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம், 1951-ல் 1.25 சதவீதமாகவும், 1971-ல் 2.2 சதவீதமாகவும் உயர்ந்தது. எனினும் ஆண்டு சராசரி வளர்ச்சி வீதம் கடும் முயற்சிகளுக்குப் பின் 1991-ல் 2.14 சதவீதமாகவும், 2001-ல் 1.93 சதவீதமாகவும், 2011-ல் 1.21 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு
- மொத்த மக்கட் தொகை 72,147,031 (சுமார் 7.21 கோடி)
- ஆண்கள் 3.61 கோடி; பெண்கள் 3.60 கோடி
- 74.23 இலட்சம் குழந்தைகள் (38.20 ஆண் குழந்தைகள் + 36.03 பெண் குழந்தைகள்)
- படித்தவர்கள் 5.18 கோடி (2.80 கோடிஆண்கள் + 2.37 கோடி பெண்கள்)
- 3.72 கோடி கிராம மக்கட்தொகை + 3.49 கோடி நகர மக்கட்தொகை
- நாட்டின் மக்கட் தொகையில் 5.96 சதவீதம் தமிழக மக்கள் (ஆனால் மொத்த பரப்பளவில் சுமார் 4 சதவீதம், 130,060 கிமீ மட்டுமே)
- 2001 மக்கட்தொகையை விட 15.61 சதவீத வளர்ச்சி (6.24 கோடி 2001-ல்) பெற்றுள்ளது.
- மக்கட்தொகை அடர்த்தி 555 பேர்/சகிமீ
- பாலின விகிதம் 996 பெண்/1000 ஆண்
- குழந்தைகள் 943 பெண்/1000 ஆண்
- கல்வியறிவு 80.09 சதவீதம் (86.77 % ஆண்கள் + 73. 44 % பெண்கள்)
- 74.55 % சொந்த வீடுகளில் வாழ்கின்றனர்.
- 74.38 % தனி குடும்பமாக வசிக்கின்றனர்.
- சென்னையில் மட்டும் 46.46 இலட்சம் பேர் உள்ளனர்.
- மொத்த மக்கட் தொகை 72,147,031 (சுமார் 7.21 கோடி)
- ஆண்கள் 3.61 கோடி; பெண்கள் 3.60 கோடி
- 74.23 இலட்சம் குழந்தைகள் (38.20 ஆண் குழந்தைகள் + 36.03 பெண் குழந்தைகள்)
- படித்தவர்கள் 5.18 கோடி (2.80 கோடிஆண்கள் + 2.37 கோடி பெண்கள்)
- 3.72 கோடி கிராம மக்கட்தொகை + 3.49 கோடி நகர மக்கட்தொகை
- நாட்டின் மக்கட் தொகையில் 5.96 சதவீதம் தமிழக மக்கள் (ஆனால் மொத்த பரப்பளவில் சுமார் 4 சதவீதம், 130,060 கிமீ மட்டுமே)
- 2001 மக்கட்தொகையை விட 15.61 சதவீத வளர்ச்சி (6.24 கோடி 2001-ல்) பெற்றுள்ளது.
- மக்கட்தொகை அடர்த்தி 555 பேர்/சகிமீ
- பாலின விகிதம் 996 பெண்/1000 ஆண்
- குழந்தைகள் 943 பெண்/1000 ஆண்
- கல்வியறிவு 80.09 சதவீதம் (86.77 % ஆண்கள் + 73. 44 % பெண்கள்)
- 74.55 % சொந்த வீடுகளில் வாழ்கின்றனர்.
- 74.38 % தனி குடும்பமாக வசிக்கின்றனர்.
- சென்னையில் மட்டும் 46.46 இலட்சம் பேர் உள்ளனர்.
இந்திய மக்கள் தொகை வளர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமான மக்கள் தொகை பெருகி வருகிறது. இவ்வாறு வெடித்து வரும் மக்கள் தொகை திட்ட கால வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. பொருளியலறிஞர் இராபர்ட் மால்தஸ் அவர்களின் கூற்றுப்படி, உணவு உற்பத்தியை விட மக்கள் தொகை வளர்ச்சி துரித வேகத்தில் அதிகரித்தால் அந்நாடு அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். இவ்வகையில் பார்த்தால் இந்தியாவில் உணவு உற்பத்தியை விட மக்கள் தொகை அதிக வேகத்தில் பெருகி வருகிறது. இதனைத் தவிர தனி நபர் வருமானமும் குறைவாக உள்ளது. இன்னமும் வறுமை முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே இந்தியா அதிக மக்கள் தொகையைக் கொண்டு பொருளாதார உழற்சிச் சிக்கலில் அடைந்து கிடக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணங்கள்
அதிக பிறப்பு வீதம், குறைந்த இறப்பு வீதம், குடிப்பெயர்ச்சி, அனைவர்க்கும் திருமணம், இள வயது திருமணம், தட்ப வெப்பநிலை, கூட்டுக் குடும்ப முறை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், கல்வியறிவின்மை, குடும்பக் கட்டுப்பாட்டின் முறைகள் குறித்த அறியாமை, சமூக மூட நம்பிக்கைகள் போன்றவை இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
மக்கள் தொகை வளர்ச்சியின் விளைவுகள்
மக்கள் தொகை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தடையாக உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக குறைந்த தலா வருமானம், உணவுப் பற்றாக்குறை, வறுமை, வேளாண்மை வளர்ச்சிக் குறைவு, வேலையின்மை, கல்வி வசதிக் குறைபாடு, பிற வசதிகள் குறைபாடு ஆகியவை தோன்றுகின்றன.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்
தற்போதைய இந்திய மக்கள் தொகையை நோக்கின், இந்த வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டே ஆக வேண்டிய ஒன்றாக உள்ளது. இதற்கு பிறப்பு வீதத்தைக் குறைத்தல், கல்வியறிவு வளர்ச்சி, திருமண வயதை உயர்த்துதல், வறுமை நீக்கம், துரித பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஈடுபடுதல் வேண்டும்.