பொது இலக்கணம்
இருதிணை
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
ஐம்பால்
பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும்.
பால் - பகுப்பு, பிரிவு.
இஃது ஐந்து வகைப்படும். உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அதுபோல, அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்
வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்
மகள், அரசி, தலைவி - பெண்பால்
மக்கள், பெண்கள், ஆடவர் - பலர்பால்
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்
அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
எ.கா. யானை, புறா, மலை.
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
எ.கா. பசுக்கள், மலைகள்.
மூவிடம்:
தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.
இடம் | பெயர்/வினை | எடுத்துக்காட்டு |
---|---|---|
தன்மை | தன்மைப் பெயர்கள் | நான், யான், நாம், யாம் .... |
தன்மை | தன்மை வினைகள் | வந்தேன், வந்தோம் |
முன்னிலை | முன்னிலைப் பெயர்கள் | நீ, நீர், நீவிர், நீங்கள் |
முன்னிலை | முன்னிலை வினைகள் | நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் .... |
படர்க்கை | படர்க்கைப் பெயர்கள் | அவன், அவள், அவர், அது, அவை ... |
படர்க்கை | படர்க்கை வினைகள் | வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன... |
வழு - வழாநிலை - வழுவமைதி
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.
வழு | வழாநிலை | |
திணை | செழியன் வந்தது | செழியன் வந்தான் |
பால் | கண்ணகி உண்டான் | கண்ணகி உண்டாள் |
இடம் | நீ வந்தேன் | நீ வந்தாய் |
காலம் | நேற்று வருவான் | நேற்று வந்தான் |
வினா | ஒரு விரலைக் காட்டிச் 'சிறியதோ? பெரியதோ?' என்று கேட்டல் | இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியது?' என்று கேட்டல் |
விடை | கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல் | "கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்" |
மரபு | தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் | தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல் |
வழுவமைதி
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.
1. திணை வழுவமைதி
"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
2. பால் வழுவமைதி
"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
3. இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
4. கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
5. மரபு வழுவமைதி
கத்துங் குயிலோசை - சற்றே வந்துகாதிற் படவேணும்
- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக