தொகைநிலைத் தொடர்கள்
சொற்றொடர்
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.
எ.கா.
நீர் பருகினான்.
வெண்சங்கு ஊதினான்.
தொகைநிலைத் தொடர்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
எ.கா.
கரும்பு தின்றான்.
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை
என்பன ஆகும்.
வேற்றுமைத்தொகை
எ.கா.
மதுரை சென்றார்
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகிய வற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
எ.கா.
தேர்ப்பாகன்
இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
வினைத்தொகை
காலம் காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
எ.கா.
வீசுதென்றல்,
கொல்களிறு
வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடை நிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
பண்புத்தொகை
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்,
வட்டத்தொட்டி - வட்டமான தொட்டி,
இன்மொழி - இனிமையான மொழி.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
எ.கா.
மார்கழித் திங்கள்,
சாரைப்பாம்பு.
திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
உவமைத்தொகை
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா.
மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் - உவமை, கை - உவமேயம் (பொருள்). இடையே 'போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
உம்மைத்தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல் , நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
எ.கா.
அண்ணன் தம்பி,
தாய்சேய்.
அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.
எ.கா.
சிவப்புச் சட்டை பேசினார்.
முறுக்கு மீசை வந்தார்.
இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.
தொகாநிலைத் தொடர்கள்
தொகாநிலைத் தொடர்
ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
எ.கா
காற்று வீசியது.
குயில் கூவியது.
முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும், "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.
அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்
1. எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்
ஆகும்.
இனியன் கவிஞர் - பெயர்
காவிரி பாய்ந்தது - வினை
பேருந்து வருமா?- வினா
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
2. விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
நண்பா எழுது! - "நண்பா " என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத்தொடர்
வினை முற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
பாடினாள் கண்ணகி.
"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
4. பெயரெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
கேட்ட பாடல் - "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
5. வினையெச்சத்தொடர்
முற்றுப்பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
பாடி மகிழ்ந்தனர்
"பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
அன்பால் கட்டினார் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
அறிஞருக்குப் பொன்னாடை - (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
மற்றொன்று - மற்று + ஒன்று.
"மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
சாலச் சிறந்தது - "சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
வருக! வருக! வருக! - ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டு நிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா.
கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக