Group 2 & 2A Mains Syllabus > Socio-economic issues in India & Tamil Nadu (இந்தியாவிலும் தமிழ்நாட்டிலுமுள்ள சமூகப் பொருளாதார பிரச்சினைகள்)
Education - Linkage between education and economic growth - Linkage between education and social development
கல்வி - கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கிடையேயான தொடர்பு - கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கிடையேயான தொடர்பு
கல்வி (Education)
ஆங்கிலேயரின் ஆட்சியில் கல்வி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை நாம் நான்கு காலகட்டடங்களாகப் பிரிக்கலாம்.
(முதற்கட்டம்) ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் (1600) முதல் 1813 வரையிலான காலம் முக்கியத்துவம் : 1813 பட்டயச் சட்டம் வரை
(இரண்டாம் கட்டம்) 1813 முதல் 1853 வரையிலான காலம் - முக்கியத்துவம்: 1935ஆம் ஆண்டின் மெக்காலேவின் கல்விக் குறிப்பு
(மூன்றாம் கட்டம்) 1854 முதல் 1920 வரையிலான காலம் - முக்கியத்துவம் : 1854ல் உட் கல்வி அறிக்கை & 1882ல் ஹண்டர் கல்விக்குழு
(நான்காம் கட்டம்) 1921 முதல் 1947 வரையிலான காலம் - முக்கியத்துவம்: 1920 மாகாணங்களில் சுயஆட்சி, 1935 இந்திய அரசு சட்டம்
தொடக்க காலங்களில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது. ஏனெனில் கல்வியானது அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.
இரண்டாவது கட்டமானது கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலமாக கருதப்பட்டது. முதலாவது பிரிவினரான கீழ்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினார். இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாடுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர். அவர்கள் கீழ்திசைவாதிகளின் கொள்கைகளை எதிர்த்தனர். மூன்றாவது பிரிவினர், பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.
இந்த கருத்து வேறுபாடுகள் 1835ஆம் ஆண்டின் மெக்காலேவின் குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது. இதனால் உயர்கல்வியில் கீழ்த்திசை மொழியைத் தவிர்த்து, ஆங்கிலக் கல்வியானது உயர் வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், 1854ஆம் ஆண்டுவரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.
ஆங்கிலேயரின் செல்வாக்குமிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம். இது 1854ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. 1882ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.
நான்காவது காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும். 1935ஆம் ஆண்டுச் சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி, மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை (1944 - Sargent Scheme) தயாரிக்கப்பட்டது. இக்கல்விக் கொள்கை சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி
1947ஆம் ஆண்டு பெற்ற சுதந்திரமானது சுதந்திர இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அது இந்தியர்களுக்கான ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய எதிர் காலத்தை கொண்டு வந்தது. பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க 1948ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது. இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு (1953 - University Grants Commission - UGC) அமைக்கப்பட்டது. 1952-1953ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக்குழு, இடைநிலை கல்வி துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும். அது கல்வியில் புதிய அமைப்பு முறைகளையும், பாடப்புத்தகங்களின் தரம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களையும் பரிந்துரைத்தது. 1964இல் இந்திய அரசு டாக்டர் D.S. கோத்தாரி (Kothari Commission) தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது. அக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.
தேசியக் கல்விக் கொள்கை (National Education Policies)
சுதந்திரத்திற்கு பிறகு, 1968ஆம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. 1986ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை, மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும். இக்கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சமவாய்ப்புகள், உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது. புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்ததுடன்,
தொடக்கப்பள்ளிகளை தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
புதிய கல்விக் கொள்கையானது 1992 ஆம் ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இது தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வியை வலியுறுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA - Sarva Shiksha Abhiyan - 2001) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA - Rashtriya Madhyamik Shiksha Abhiyan - 2009)
அனைவருக்கும் கல்வி இயக்கம் என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். இது அனைத்து குழந்தைகளும் தொடக்கக்கல்வியை பெறுவதற்காக 2000-01ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE - Right To Education Act - 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழிசெய்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது. சில முக்கிய செயல்பாடுகளான மதிய உணவு வழங்குதல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல், வகுப்பறைக்கான கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவைகள் இவற்றுள் அடங்கும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA 2009) பதினோறாம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (11th FYP - 2007 - 2012) செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இது இடைநிலைக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும், பொதுவான அணுகுமுறைக்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டம் ஆகும். 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம்மாணவர்களுக்கு தரமான, எளிதில் கிடைக்கக் கூடிய, எளிய அணுகுமுறையுடன், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக் கல்வியை அளிப்பதே இதன் (RMSA) நோக்கம் ஆகும். RMSA திட்டத்தின் மூலம் அறிவியல் ஆய்வகம், நூலகங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி, கணினி வழிக் கல்வி, பள்ளி இணைச் செயல்பாடுகள் மற்றும் கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இந்திய அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது.
2017ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரைவதற்கான ஒரு குழு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.
2018-2019ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வியினை
முன்பருவக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை எவ்வித பாகுபாடுமின்றி முழுமையாக வழங்குவதற்கு முன்மொழிந்தது.
சமக்ர சிக்ஷாவானது (Samagra Shiksha Abhiyan) சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை அளவிடுதல் ஆகிய பள்ளியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்தக் குறிக்கோளை அடைய ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது SSA மற்றும் RMSA ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
கல்வியின் பணிகள்
கல்வி பல பணிகளை ஆற்றுகிறது. அவை :
1. கல்வியின் மூலம் இளைய தலைமுறையினர் தாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பிறரிடம் எப்படிப் பழக வேண்டும். எந்தக் காரியங்களைச் செய்யலாம் எந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது, எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொள்ளுகிறார்கள். இப்படிக் கற்றுக் கொண்டு சமூகத்தில் அதன்படி ஒழுகுகிறார்கள். இவ்வாறு கல்வி இளைய தலைமுறையினரைச் சமூகத்தோடு இயைந்து ஒட்டி ஒழுகு வாழச் செய்கிறது.
2. கல்வி மனிதர்களுக்கு திறனாயும் திறமையைக் (Critical faculty) கொடுக்கிறது.
எவற்றையும் அலசி ஆராய்ந்து எந்த அம்சங்கள் ஏற்கத் தக்கவை, எந்த அம்சங்கள் ஏற்கத் தகாதவை என்று கண்டுபிடிக்கக்கூடிய திறமையைக் கொடுக்கிறது. எவற்றையும் திறனாயும் திறமை அமையும் போது மனிதர்கள் தாங்கள் கற்றுக் கொள்கிற பண்பாட்டு அம்சங்களில் எவை பொருத்தமானவை, நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவை, காலத்துக்கு ஒத்தவை என்று இனங்கண்டு அவற்றையே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். பதுமை போன்று தங்களுக்குக் கற்பிக்கப்படுவதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கல்வியே இதற்குக் காரணமாக அமைகிறது.
3. கல்வியறிவு பெற்ற மக்கள் காலத்துக்கு ஒவ்வாதவை, ஏற்றுக் கொள்ளத் தகாதவை என்று விலக்கி வைக்கிற பண்பாட்டு அம்சங்கள் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்து விடுகின்றன. ஆயினும், கல்வியின் மூலமாக அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மக்கள் புதிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புதிய அம்சங்கள் வழக்கில் இடம் பெறுகின்றன. பழையன கழிந்து, புதியன புகுவதால் பண்பாடு தேக்கம் (Stagnation) அடையாமல் மாற்றமடைந்து வளர்ச்சியடைகிறது.
4. கல்வியினால் அறிவு வளர்கிறது. அறிவு வளர்ச்சியினால் புதிய தொழில்நுட்பங்கள் தோன்றுகின்றன. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. இதன் பலனாகச் சமூகத்தில் முன்னேற்றம் அமைகிறது.
இவ்வாறு கல்வி தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் பல பணிகளை ஆற்றுகிறது. குறிப்பாக, பண்பாடு தலைமுறை தலைமுறையாய் அமைவுறவும், சமூக முன்னேற்றம் ஏற்படவும் உதவுகிறது.
பயிற்சி வினாக்கள் :
1. இந்தியாவில் கல்வியின் வளர்ச்சி பற்றி விவரித்து எழுதுக.
ஆங்கிலேயரின் ஆட்சியில் கல்வி வளர்ச்சி - சுதந்திரத்திற்குப் பின் கல்விக்கொள்கை, SSA, RMSA, SSA, 2019 அறிக்கை.
2. கல்வியினால் சமூகம் அடையும் பயன்களை விவரி.
இளைஞர்கள் சமூகத்தோடியைந்த வளர்ச்சி - ஏற்கத்தகாத பண்பாட்டு அம்சங்களை களைதல் - பண்பாடு மாற்றம் - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக